Sunday, November 30, 2008

பிறந்த நாள் வாழ்த்துகள் டாம்!

டாமுக்கு இன்று பிறந்த நாள். அதுக்காக வாத்தியம் இசைக்கிற சத்தத்திலே டாமுக்குத் தூக்கி வாரிப் போடுது போல! பாவம் இல்லை டாம்?? என்னது பாவமா? அதெல்லாம் இல்லை! நல்லா வேணும்! :P


போனால் போகுது டாம், இந்தா இந்த ரோஜாப் பூவை வச்சுக்கோ இன்னிக்கு உனக்குப் பிறந்த நாளாச்சேனு ஜெரி கொடுக்குது. டாமும் சந்தோஷமா வாங்கிக்குதே? ம்ம்ம்ம் இப்போ தைரியமா கேக்கைக் கொடுக்கலாமா?? ப.கொ. கேக் இது, டாமுக்குனு ஸ்பெஷலாத் தயாரிச்சது.
Happy Birthday Tom.

Wednesday, November 12, 2008

seeking change of job

நான் பங்கேற்கிற ஒரு குழுவில வந்த ஒரு அஞ்சல். முடிஞ்சா உதவுங்க!
~~~~~~~~~~~~~~~~
நண்பர்களுக்கு வணக்கம்,

IBM Websphere Admin ஆக பணிபுரிகின்ற நான் தற்போது வேறு நிறுவனங்களில் வேலை தேடுகிறேன். உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் அலுவலகத்திலோ இவ்வேலைக்கான காலியிடங்கள் இருப்பின் எனக்கு மடலிடுங்கள்( nilaraseegan@gmail.com )மறக்காமல் உங்களது அலைபேசி எண்ணையும் குறிப்பிடுங்கள்.

மாணவ சமுதாயம் எங்கே போகின்றது???

சற்று முன் தொலைக்காட்சிகளில் செய்தி ஒன்றைப் பார்த்ததும் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு குழுவினருக்குள் நடந்த சண்டையின் நேர்முக ஒளிபரப்பைப் பார்த்ததும் மனம் அதிர்ந்து போனது. ஒரு வாரமாக இரு குழுவினருக்குள்ளே ஏதோ போஸ்டர் ஒட்டுவதில் தகராறு இருந்து வந்திருக்கின்றது. அது எதனால், என்ன போஸ்டர் என்பது நாளைக்குச் செய்தித் தாள் பார்த்தால் தான் தெரியும். ஆனால் ஒரு வாரமாய்க் கனிந்து கொண்டிருந்த நெருப்பு இன்று பிடித்து எரிய ஆரம்பித்துக் கடைசியில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இரு மாணவர்களை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியதில் அந்த மாணவர்களின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது என நம்புகின்றேன். வருங்காலத்தில் மக்களுக்குச் சட்டத்தையும், ஒழுங்கையும், நேர்மையையும் போதிக்க வேண்டிய ஒரு முக்கியமான, உன்னதமான இடத்தில் இருக்கப் போகின்றவர்கள் இன்று அல்ப விஷயத்துக்காக இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டால், பின் சாமானிய மக்கள் இவர்களை நம்பித் தங்கள் வழக்கை எவ்வாறு ஒப்படைப்பார்கள்?? மாணவ சமுதாயம் எங்கே போகின்றது? இவர்களா வளமான இந்தியாவை உருவாக்கப் போகின்றார்கள்? இவங்க கையில் இந்தியா எப்படி இருக்கும்?? இதை ப்ளாக் யூனியனில் போடுவதன் காரணம் இளைஞர்களும், இளைஞிகளும் இங்கே அதிகம் இருப்பதால். அவங்களுக்கும் செய்தியின் தீவிரம் புரியணும்னு.

Monday, November 3, 2008

தி.ரா.ச சார் வீட்டு கல்யாணம்


வாழ்க்கையில் சிலர் வீட்டு கல்யாணங்களை மிஸ் பண்ணவே கூடாது. ஒரு வேளை மிஸ் பண்ணி விட்டால் அப்புறம் ஒரே பீலிங்க்ஸா இருக்கும். எனவே ஒரு மாதத்துக்கு முன்னமே பிளான் பண்ணி தீவாளியோடு சேர்த்து லீவு போட்டு தி.ரா.ச சார் வீட்டு கல்யாணத்துக்கு ரிஷப்ஷனிலிருந்து, முகூர்த்தம் வரை கலந்து கொள்ள முடிந்தது.

ரிசப்ஷனுக்கு தங்கமணி, ஜுனியர், அவன் தம்பி அங்கதன் சகிதமாக மண்டபத்தில் வந்து இறங்கியதும் வாசலிலேயே பளீரிடும் வெண் சட்டை, டை சகிதம் தி.ராச.சார் உமா மேடம் சகிதமாக எங்களை வரவேற்றார். எனக்கு அப்பவே கண்ணை கட்டி விட்டது. உள்ளே நுழைந்தால் நாதஸ்வர கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து காமிராக்கள் பளிச்சிட மணமக்கள் மேடைக்கு வர சர்க்யூட் டிவி உதவியால் மேடையில் நடைபெறுவதை எந்த மூலையிலிருந்தும் பார்க்க முடிந்தது.

மொய்க்கு முந்து! பந்திக்கு பிந்து!(கீதா மேடம் நோட் தி பாயின்ட்!) என்ற கொள்கைப்படி வாங்கி வந்திருந்த கிப்ட்களுடன், அமெரிக்காவில் இருக்கும் எஸ்கேஎம்மின் மொய் கவருடன் வரிசையில் காத்திருந்தோம். கிப்ட் என்ன?னு தி.ராச. சார் பிரித்து பார்த்து பின்னூட்டம் இடுவார்.

தம்பியுடையான் ஏற்கனவே சாருக்கு உதவியாக வருபவர்களை வரவேற்பதிலும், கிப்ட்களை அடுக்கி வைப்பதிலும் முனைந்து விட்டான். மிக சரியாக மேடைக்கு ஏறும்போது தங்கஸ், புடவை பார்டர் வீடியோவில் சரியா தெரியாது! அதான்! என ஜுனியரை என் கையில் திணித்து விட்டது தற்செயலான விஷயம் என ஏமாந்து விட்டேன். அதுவரை என் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வைத்திருந்த பல காயத்ரி, வைஷ்ணவிகளின் அம்மாக்கள் முகத்தை திருப்பி கொண்டதும் தான் தங்கமணியின் நமட்டு சிரிப்பில் ஒளிந்திருந்த வில்லத்தனம் எனக்கு லேட்டாக புரிந்தது. பின் மனதை தேற்றிக்கொண்டு பந்திக்கு போய் பஃபே முறையில் ஒரு பெங்காலி ஸ்வீட்(பெயர் என்ன?), கட்லட், சாம்பார் சாதம், ரசம் சாதம்,(சில ஐட்டங்கள் மறந்து விட்டது) எல்லாம் அமுக்கி விட்டு நான் வந்திருந்த வாடகை காரில் ஏறிக் கொண்டேன்.

மறு நாள் முகூர்த்ததுக்கு காலை எட்டு மணிக்கே நான் மட்டும் வந்து சேர்ந்தேன். தம்பி அங்கேயே தங்கி விட்டான். காசி யாத்ரைக்கு கிளம்பிய மாப்பிள்ளை ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டி லஸ் கார்னர் வரை போய்விடும் அபாயம் இருந்ததால் சார் பெரிய மனது பண்ணி அழைக்க திரும்பி வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். தானே இயற்றிய ஒரு பாடலை, மைக் பிடித்து தன் சொந்த குரலில் இனிமையாக சார் பாட ஆரம்பிக்க ஊஞ்சல் களை கட்டியது. ராகம் என்ன ஆபேரியா?

மாப்பிள்ளை கட்டி இருந்த அதே ஸ்டெயில், ரகத்தில் தி.ராச சாரும் பட்டு வேஷ்டி கட்டி இருந்தது மற்றும் உமா மேடமும் கிளி பச்சை அரக்கு பார்டரில் பாந்தமான ஒன்பது கஜத்தில் இருந்தது மண்டபத்தில் பொண்ணு மாப்ளை யாரு? என்ற சந்தேக அலை பரவியதை தவிர்க்க முடியலை.

இடைப்பட்ட கமர்ஷியர் ப்ரேக்கில் நான் காலை டிபனுக்கு நழுவி விட்டேன். மெதுவான இட்லி, முறுகலான தோசை, நெய் மணக்கும் பொங்கல், தொட்டுக்க தேங்காய் மற்றும் தக்காளி சட்னி, பருப்பு சாம்பார் மற்றும் அசோகா அல்வா ( நான் அதை கேசரின்னு நினைச்சு கொசுறு எல்லாம் கேட்டு தொலைத்தேன்) என லைட்டா ஒரு டிபனை (இதுவாடா லைட்டு?) சாப்பிட்டு விட்டு பில்டர் காப்பியையும் சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்தமர்ந்தேன்.

இதற்கிடையில் முந்தின நாளே அம்பத்தூர்ல இருந்து மொபெட், பேருந்து, எலக்ட்ரிக் டிரேயின் என சகலவிதமான வாகனங்களிலும் ஆரோகணித்து கல்யாணத்துக்கு கிளம்பிய கீதா மேடம், ஒரு வழியா அடுத்த நாள் காலை மண்டபத்தில், நேரே டிபன் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எனக்கு சாம்பு மாமாவின் பாவமான முகம் ஏற்கனவே நினைவில் இருந்ததால் டக்குனு அடையாளம் கண்டு கொண்டு ஷேம நலன் விசாரித்தேன். பக்கத்தில் கர்ர்ர் புர்ர்ர்ர்னு சவுண்டு வரவே அது நிச்சயமாக சம்பு மாமாவை அடக்கியாளும் கீதா மேடமாக தான் இருக்கும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

பின் மூத்த பதிவரான மேடத்தை தக்க ஆசனத்தில் அமர்த்தி பேசிக் கொண்டு இருந்தோம். ஒரு காலத்தில் பதிவர் என அறியப்பட்டவரும், கீதா மேடத்தின் பினாமியுமான திருமதி வேதா, தன் ரங்கமணி பின் தொடர வந்து சேர்ந்தார். அதுக்கப்புறம் ஒரே வம்பு! வம்பு வம்பு தான். தனக்கு லட்சகணக்கான பின்னூட்டங்கள் மெயில் வந்து குவிவதாகவும் பப்ளிஷ் பண்ண நேரமே கிடைப்பதில்லை!னு மேடம் விட்ட அலப்பரை இருக்கே!


முகூர்த்தம் முடிந்ததும், ஏற்கனவே சாம்பு மாமா சமைத்து வைத்திருப்பதால் நாங்க கிளம்பறோம்! என அவசரம் அவசரமாக மேடம் கிளம்பி விட்டார். கிளம்பும் போதும் கையில் கிப்ட் பாக்ஸ் வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பீன்ஸ் உசிலி (அன்று பீன்ஸ் கிலோ என்பது ரூபாய் சென்னையில்), கத்ரிகாய் சாம்பார், அவியல், கடலை பருப்பு பாயசம் (இரவு வயத்தை கலக்கி விட்டது), தக்காளி ரசம், அப்பளம், வடை என முகூர்த்த சாப்பாடு அமர்களமாய் இருந்தது. சிறிது நேரம் திராச சாருடன் பேசிவிட்டு மறக்காமல் தாம்பூல பை, பக்ஷணம் (லட்டு, ஐந்து சுத்து முறுக்கு, அதிரசம்) எல்லாம் நானும், மெளலி அண்ணாவும் வாங்கி கொண்டோம்.

சில துளிகள்:


திருமண மண்டபம் முழுக்க நம்மாழ்வார், பெரியாழ்வார், மணவாளமாமுனிகள்னு ஒரே வைஷ்ணவ பெரியவர்களின் திருபடங்கள். ஒரு போட்டோவில் பெயர் இல்லை, ஒரு வேளை கேஆரேஸ்ஸ் அண்ணாவா இருக்குமோ?னு உத்து உத்து பாத்தேன். :)


கொண்டை போட்டு பூ முடித்து ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஒரு மாமி, அம்பி உன் ஜாதகம் கிடைக்குமா?னு கேட்டார்கள். மேடையில் ஜுனியர் சகிதம் போட்டோவுக்கு போஸ் குடுத்து விட்டு நான் இறங்கிய பின் ஜாதகம் குடுக்க அந்த மாமியை தேடினேன். எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்கு. திராசா சார், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

கேட்டரிங்க் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தின் பெயர் அம்பி கேட்டரர்ஸ் என்பது தற்செயலான ஒற்றுமையே.