அது ஒரு பெரிய ஹோட்டலின் ஆடம்பரமான அறை. மது பாட்டில்களும் மிச்சர் பாக்கெட்களும் சிதறி கிடக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அங்கே ஆட்கள் கூட ஆரம்பிக்கிறார்கள். அங்கே வந்த பிரபலங்கள் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தலைகள். 'இளைய மாலுமி' சுஜய், பிரபல வில்லன் நடிகர் வீமன், காமெடி நடிகர் கிவெக், கவர்ச்சி கண்ணி ப்ரிஷா மற்றும் மசாலா பட இயக்குனர் ஜரணி. எல்லோரும் ஒரு புதிய படத்தின் கதை விவாதத்துக்காக அங்கே வந்திருந்தனர். படத்தின் தயாரிப்பாளர் அஸ்தமநிதி அப்பொழுது தான் உள்ளே நுழைந்தார். தமிழகத்தின் மூத்த தலைவரின் பேரன் அவர். பார்க்க பள்ளி மாணவர் போல் இருந்தார்.
அஸ்தமநிதி : "என்ன ஜரணி ஸார்? எல்லாரும் வந்தாச்சா?"
ஜரணி: "எல்லாம் ரெடி ஸார். சுஜய் வந்தாச்சு. ஆரம்பிக்கலாமா?"
அச் : "தாத்தா கிட்ட ஒரு வாட்டி சொல்லிடவா?"
ஜரணி : (முணுமுணுப்பு)"இவன் வேற. சுச்சு போகணும்னா கூட தாத்தாவ கேக்கவா பாட்டிய கேக்கவா னு இம்சை பண்றான்" (சத்தமாக)"அதுக்கு என்ன ஸார். பெரியவங்க ஆசீர்வாதம் தானே முக்கியம்"
சுஜய் : "ன்னா. எல்லாரையும் வர சொல்லிட்டீங்க. கதைய சொன்னீங்கன்னா நாங்க கேட்டுட்டு கெளம்புவோம்"
ஜரணி : "அது தான் ஸார். நாம போன படம் 'பில்லி' எல்லாம் கலெக்ஷனையும் உடைச்சுது. இந்த தடவை அதையும் தாண்டி போகணும்"
சுஜய் : "என்ன வழக்கம் போல மகேஷ் பாபு படம் ரீமேக் தானே."
ஜரணி : "இல்ல ஸார். அது தான் உங்களுக்கு போட்டியா இந்த 'பயம்' ரவி எல்லா படமும் வாங்கி தொலையறானே"
சுஜய் : "ஆமா. இதுல வேற இந்த சுஜித்குமார் படமும் ஓடிடுச்சு. அதனாலயே நம்ம படம் ஓடியே ஆகணும்."
கிவெக் : (முணுமுணுப்பு)"ஓடுதே. ஆனா தியேட்டர் விட்டு பயங்கர வேகமா ஓடுது."
ஜரணி : "இந்த தடவை நானே சொந்தமா யோசிச்சு ஒரு கதை சொல்ல போறேன்"
சுஜய் : (பயந்தவாறே)"ஏங்க இந்த விஷப்பரீட்சை எல்லாம். பேசாம அடுத்த மகேஷ் பாபு படம் வர வரைக்கும் காத்திருக்கலாம்.
ஜரணி : "கதை கேட்டீங்கனா நீங்களே ஆடிடுவீங்க"
சுஜய் : போங்க ஸார். இதே வார்த்தை தான் போன படம் "அழகிய திருட்டு மகன்" எடுத்த இயக்குனரும் கதை சொல்லும்போது சொன்னார்.என்ன ஆச்சு"
கிவெக் : "ATM ATM னு சொல்லி கடைசில தயாரிப்பாளரை ATM வாசல்ல பிச்சை எடுக்க விட்டுட்டாங்க"
சுஜய் : "இந்த படம் நல்லா வரணும்ங்க"
ஜரணி : "நீங்க கதைய கேளுங்க ஸார். அப்புறம் மூக்கு மேல விரல் வெப்பீங்க"
கிவெக் : "மூக்கு மேல விரல் வெச்சா பரவாலை. மூக்கு உள்ள விரல் போகற அளவுக்கு மட்டமா இல்லாம இருந்தா சரி"
ஜரணி : "படத்தோட பேரு என்ன னு கேக்க மாட்டீங்களா?"
கிவெக் : "வேணாம்னு சொன்னா விடவா போறீங்க. சொல்லி தொலைங்க"
ஜரணி : "படம் பேரு காக்கா."
கிவெக் : "தயாரிப்பளரை காக்கா பிடிக்கறீங்க னு உறுதி ஆயிடுத்து"
ஜரணி : "நீங்க கதை கேளுங்க அப்புறம் உங்களுக்கு அர்த்தம் புரியும். ஓப்பன் பண்ணினா கடப்பா கிராமம் காட்றோம்."
கிவெக் : "ஏன் ஸார் எப்பவுமே ஆந்திரா பார்டர் பக்கம் ஒதுங்கிடறீங்க?"
ஜரணி : "எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான். இங்கே ஓடலைனாலும் அங்க ஓடிடும்ங்கற நம்பிக்கை தான்."
சுஜய் : "அதெல்லாம் இருக்கட்டும். கதைக்கு வாங்க"
ஜரணி : "ஓப்பன் பண்ணினா கடப்பா கிராமம். புழுதி. அழுக்கு. அங்க உங்க அப்பா வில்லன் வீமன் கிட்ட சவால் விடுறாரு "என் மகன் வருவாண்டா" னு"
சுஜய் : "அப்போ நாம ஒபபனிங் சீனும் சாங்கும் வெச்சுக்கலாமா ன்னா???"
கிவெக் : "ஹ்ம்ம்ம். நடிக்கிறதை தவிர எல்லாத்தையும் கேளு."
ஜரணி : "ஆமாம் ஸார். எல்லாரும் சாக்கடை பக்கம் பாக்கறாங்க. அப்போ நீங்க அந்த சாக்கடையோட மூடிய உடைச்சு வெளில வறீங்க. அரங்கமே வெடிக்குது ஸார்."
கிவெக் : "படம் சாக்கடை னு மறைமுகமா சொல்றோம்."
சுஜய் : "சூப்பர். அப்புறம் சொல்லுங்க ஸார்"
ஜரணி : "அப்புறம் நீங்க சைக்கிள் ரேஸ் ல கலந்துகறீங்க. அப்போ உங்க ஓட்டை சைக்கிள் வீல் கழந்துடுது"
சுஜய் : "ஹயயோ. அப்புறம்?"
ஜரணி : "நீங்க சைக்கிளை தோள் மேல போட்டுட்டு ஓடறீங்க. அப்புறம் கடைசில சைக்கிளோட ஒரே டைவ். அப்புறம் என்ன சாங் தான்."
சுஜய் : "சூப்பர். இப்பவே டியூன் போடலாம்."
ஜரணி : "ஓகே ஸார். எங்க பா அந்த புது ஆசிஸ்டெண்ட். போய் மாரியை கூட்டிண்டு வா."
புது ஆசிஸ்டெண்ட் : "யாரு மாரி?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "யோவ். என்னய்யா மாரியை தெரியாது ங்கற?"
புது ஆசிஸ்டெண்ட்: "ரஹ்மான், ராஜா, யுவன் எல்லாம் கேள்வி பட்டு இருக்கேன். யாரு மாரி?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "இது சுஜய் ஸார் படம். அவர் படம் நா கண்டிப்பா 5 குத்து பாட்டு இருக்கணும். அது தான் அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும். (ரகசியமாக)அது மட்டும் இல்ல..இந்த மாதிரி டப்பாங்குத்து பாட்டு போட்டா தான் இந்த மாதிரி மொக்கை படம் பாத்து தூங்கர ஜனங்க எழுந்திருப்பாங்க."
புது ஆசிஸ்டெண்ட்: "அது சரி. மாரி யாரு?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "மாரி இங்கே சாவுக்கு மேளம் அடிக்கிறவன். அவன் தான் சுஜய் ஸார் படத்துல எல்லாம் தப்பு தாளம் அடிக்கிறவன்."
ஜரணி : "யோவ். போய் சீக்கிரம் அவனை கூட்டிண்டு வாயா. சுட சுட ஒரு 4 டண்டனக்கா டியூன் ரெடீ பண்ணிடலாம்."
சுஜய் : அதுக்கு அப்புறம் கதைய சொல்லுங்க ஸார்.
ஜரணி : ஒபபனிங் சாங்கக்கு அப்புறம் நீங்க உங்க அம்மா கிட்ட பேசகறீங்க. தாய்க்குலம் எல்லாம் கண்ணீர் விட்டு கதறும். அப்புறம் ஒரு ஃபைட் சீனு. அதுல சும்மா பறந்து பறந்து உதைக்கறீங்க. அது மட்டும் இல்ல ஸார். நீங்க ஓடும்போது ஒரு ஆட்டோ குறுக்க வருது ஸார். அத தாண்டி அப்படியெ குதிக்கறீங்க. வில்லன்ணோட ஆட்களை நீங்க அடிச்ச அடி பாத்து அவருக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர் "ஏதோ புயல் ல சிக்கினாரா. இல்ல ஒரு நூறு பேரு இவர அடிசாங்களா" னு கேக்கறாரு
கிவெக் : இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே
ஜரணி : (சுதாரித்து) அட என்ன தம்பி ரொம்ப திங்க் பண்ற?
கிவெக் : அடங்கொக்கா மக்கா. இது பாட்ஷா ல வர வசனம் தானே.
ஜரணி : அட அரசியல் ல இதெல்லாம் சகஜம் பா
சுஜய் : அப்புறம் சொல்லுங்க ன்னா
ஜரணி : அப்புறம் வில்லன் கிட்டேருந்து நீங்க தப்பிக்கும்போது தூரத்துல ஒரு ரயில் வண்டி போகுது. நீங்க ரயில் வண்டிய பாக்கறீங்க வில்லனை பாக்கறீங்க. 3 பேரையும் மாத்தி மாத்தி காட்டி ரசிகர்களை டென்ஷன் பண்றோம். என்னடா பண்ண போறீங்க னு எல்லாரும் யோசிக்கும்போது நீங்க ஒரே டைவ் அடிச்சு அந்த ரயில்வண்டிக்கு பக்கத்துல குதிக்கறீங்க.
கிவெக் : நல்லவேளை இவர் வீட்டு பக்கத்துல ஏர்போர்ட் இல்ல.
ஜரணி : இல்ல...எல்லாம் ஒரு பில்ட் அப் தான்
கிவெக் : டேய் இவன் கதை சொல்லுடா னு சொன்னா நீ எங்க கதை சொல்ற. அரை மணி நேரமா பில்ட் அப் தாண்டா தர. அடிக்கறான் ங்கற, குதிக்கறாங்கர, சாங்கு ங்கற, ஃபைட் ங்கற. உண்மையா சொல்லு....சும்மா பில்ட் அப் வெச்சே பஜனை பண்ணலாம் னு தானே முடிவு பண்ணிட்ட.
ஜரணி : என்ன தம்பி நீங்க. சுஜய் ஸார் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை தான் நான் தரேன். நான் என்னமோ எனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கிற மாதிரி பேசறீங்க.
சுஜய் : காதல் பத்தி சொல்லவே இல்லையே.
ஜரணி : ஆ. நீங்க மலேசியாக்கு உங்க அப்பா கடன் அடைக்க போகும்போது அங்க நீங்க மாறுவேஷம் போடறீங்க. கண்ணுல கர்சீஃப் கட்டிக்கறீங்க.
கிவெக் : கர்சீஃப் இல்லாம ஹீரோயின் ஹீரோவை பார்க்கும்போது அவனை அவங்களுக்கு அடயாளமே தெரியாதே.
ஜரணி : எப்படி தம்பி கரெக்டா சொல்றீங்க?
கிவெக் : பெரிய BBC Mastermind கேள்வி. பதிலே கண்டு பிடிக்க முடியாது பாரு. இந்த வீணா போன கண்றாவிய தான் காலம் காலமா செஞ்சு தொலையறீங்க.
ஜரணி : அப்புறம் ஹீரோயினோட பாட்டி யாருன்னா நம்ம ரம்யா கிருஷ்ணன். அவங்க கிட்ட ஒரு வடை சைஸ்ல ஒரு வைரம் இருக்கு. அது ஹீரோ கிட்ட சிக்குது. ஹீரோ அதை சென்னை எடுத்துட்டு வர்றாரு. அவர் கூட ஹீரோயினும் வர்றாங்க. அப்புறம் வில்லன் ஹீரோவ தேடி சென்னை வர, அப்புறம் வில்லன், ஹீரோயினோட முறைமாமனுக்கும் ஹீரோ கிட்ட தகராறு வருது.
சுஜய் : சூப்பர் ன்னா
ஜரணி : அந்த வடை சைஸ் வைரத்தை வெச்சு நீங்க எப்படி பாடு படுத்தறீங்கங்கன்றத பார்த்து அரங்கமே வெடிக்கும். நடு நடுவுல ஒரு குத்து பாட்டு, ஒரு பில்டப், ஒரு பஞ்ச் னு உங்க இமேஜ் ஏத்திரலாம்.
கிவெக் : கதை ல நிறைய கோங்குரா சட்னி வாடை அடிக்குது. ஏமி ரே பாவா? ஹிட் தீஸ்குந்நாவா?
ஜரணி : ஹீ ஹீ. எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான். அதுவும் இதுல ஒரு சூப்பர் செண்டிமெண்ட் பிட் எல்லாம் இருக்கு. வில்லன் எந்த கல்லால உங்க அப்பாவை அடிக்கிறாரோ, நீங்க கடைசில அதே கல்லால வில்லனை அடிக்கறீங்க. எப்படி?
கிவெக் : (முணுமுணுப்பு)முதல்ல உங்க ரெண்டு பேரையும் அந்த கல்லால அடிச்சு கொல்லனும். அப்போ தான் தமிழ் சினிமா நிம்மதியா இருக்கும்.
ஜரணி : அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி கடைசில போலீஸ் வர்றாங்க. உங்கள ஜஸ்ட் லைக் தட் ரீலீஸ் பண்றாங்க. நீங்களும் ஹீரோயினும் டூயட் பாடி சுபம் போட்டுடலாம். அந்த வடை சைஸ் வைரம் உங்களுக்கு தான்.
சுஜய் : ஆமா. ஏன் இந்த படத்துக்கு காக்கா னு பேரு வெச்சீங்க???
ரசிகன் : அதை நான் சொல்றேன் ன்னா.
சுஜய் : யாரு இவன்? சரி பரவாயில்ல சொல்லு.
ரசிகன் : நீ காக்கா மாதிரி கண்றாவியா இருக்க. ரம்யா கிருஷ்ணன் ஒரு பாட்டி. அவங்க கிட்ட வடை ஸைஸ் ல ஒரு வைரம். அத நீ திருடற. இது எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இல்ல?
கிவெக் : அட பாவி. காக்கா பாட்டிகிட்ட வடை சுட்ட கதைய தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து சொன்னியா. எஸ்கேப்.!!!!!!
எல்லோரும் சிதறி ஓடுகிறார்கள்.
எழுதியவர் : ஹரீஷ்